மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மார்ச் 14, சனிக்கிழமையன்று, சோசலிச சமத்துவக் கட்சி (ஐக்கிய இராச்சியம்), லண்டனில் “ட்ரொட்ஸ்கிசமும் புரட்சிகர தலைமைக்கான போராட்டமும்” என்ற தலைப்பில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் (ICFI), தொழிலாளர் புரட்சிக்கட்சி (WRP) தலைமைக்கு எதிராக நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் 40-வது ஆண்டை இக்கூட்டம் குறித்தது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய இராச்சியம் முழுவதிலுமிருந்து தொழிலாளர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
உலக சோசலிச வலைத் தளத்தின் மற்றும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரான டேவிட் நோர்த் உட்பட பேச்சாளர்கள் இந்தக் கூட்டத்தில் உரையாற்றினர். அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான அமெரிக்க தொழிலாளர் கழகத்தின் (Workers League) தலைவராக இருந்த டேவிட் நோர்த், WRP தலைமையின் அரசியல் சீரழிவிற்கும், உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை அழிப்பதற்குமான அதன் கூட்டு முயற்சிகளுக்கும் எதிரான போராட்டத்தில் தலைமைப் பாத்திரத்தை வகித்தார்.
1980களின் நடுப்பகுதியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சி வெளியேற்றப்பட்டதானது, சர்வதேச சோசலிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணமாக அமைந்தது. ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் போக்காக இருந்த ட்ரொட்ஸ்கிசத்தின், அதாவது புரட்சிகர மார்க்சிசத்தின் உயிர் வாழ்க்கைக்கே அது பெரும் சவாலாக இருந்தது.
20ஆம் நூற்றாண்டில் ஒழுங்கமைக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிச அணிகள் இடைவிடாத தாக்குதல்களுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதல்களில் மிக முக்கியமானவை சோவியத் யூனியனில் நடந்த ஸ்டாலினிச எதிர்ப் புரட்சியிலிருந்தும், பின்னர் பாப்லோவாதம் என அழைக்கப்பட்ட திருத்தல்வாதப் போக்கிலிருந்தும் வந்தன. பாப்லோவாதமானது, ஸ்டாலினிச, சீர்திருத்தவாத மற்றும் முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுக்குள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கரைத்து விட வேண்டும் என்று வலியுறுத்தியது.
பல தசாப்தங்களாக ஜெர்ரி ஹீலி, கிளிப் சுலோட்டர் மற்றும் மைக் பண்டா ஆகியோரின் தலைமையில் இருந்த பிரித்தானிய ட்ரொட்ஸ்கிச இயக்கம், இந்தப் போக்குகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணிப் பங்காற்றியது. ஆனால் 1980களுக்குள், சந்தர்ப்பவாத மற்றும் தேசியவாதச் சாயலுடைய நீண்டகால அரசியல் பின்னடைவின் விளைவாக, அவர்கள் மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் முக்கிய கோட்பாட்டு சாதனைகளையும், அடிப்படைச் சித்தாந்தங்களையும் கைவிட்டு, பின்னர் காட்டிக் கொடுத்து துரோகம் செய்தனர்.
அமெரிக்கத் தொழிலாளர் கழகத்தின் தலைமையிலான ICFI-ன் பெரும்பான்மையினர் WRP-க்கு எதிராக நடத்திய போராட்டமானது, அத்தகைய அரசியல் அழுத்தங்கள் மற்றும் விரோதமான வர்க்க சக்திகளுக்கு எதிராக ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றுத் தந்தது.
இது மார்க்சிச சிந்தனையின் மறுமலர்ச்சிக்கு வழி வகுத்தது. இதில் உலகமயமாக்கல் குறித்த இணையற்ற ஆய்வுகள், சோவியத் யூனியனின் கலைப்பு மற்றும் முதலாளித்துவத்தின் மீட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை ஆட்கொண்ட சோசலிச-எதிர்ப்புத் துறப்புவாதம் ஆகியவற்றைப் பற்றிய ஆழமான பகுப்பாய்வுகளும் அடங்கும்.
இதுவே சோசலிச சமத்துவக் கட்சிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைத்தது.
இந்த நிகழ்வுகளை விளக்குவதற்காக, பிரித்தானிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளர் தோழர் கிறிஸ் மார்ஸ்டன், ICFIன் செயலாளர் பீட்டர் சுவார்ட்ஸ் மற்றும் தோழர் நோர்த் ஆகியோரைக் கொண்ட குழுவினர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
1985-86 பிளவின் போது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பக்கம் நின்ற WRP-ன் சர்வதேசவாத அணியின் முன்னணி உறுப்பினரான மார்ஸ்டன், “WRP-ன் அரசியலில் இருந்த சந்தர்ப்பவாதத்தின் சாராம்சம், அது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டையும், உலக சோசலிசப் புரட்சிக்கான அதன் மூலோபாயத்தையும் கைவிட்டதிலேயே மிகவும் தெளிவாக வெளிப்பட்டது …” என்று விவரித்தார்.
“உலகெங்கிலும் ட்ரோட்ஸ்கிசக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதற்கான இந்தச் சர்வதேசவாத மூலோபாயத்திற்குப் பதிலாக, பிரித்தானியாவில் கட்சியின் பணிகளுக்குத் தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டும் நோக்கத்துடன் WRP தனது சொந்த வெளியுறவுக் கொள்கையை உருவாக்கியது. இது மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு முதலாளித்துவ ஆட்சிகளுடன் கொள்கையற்ற உறவுகளை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டிருந்தது.”
“ஐக்கிய இராச்சியத்திற்குள், WRP முதலில் தொழிலாளர் வர்க்கத்திடையே நிலவிய இயல்பான டோரி-எதிர்ப்பு உணர்விற்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டது. பின்னர் ஒரு தீவிர-இடது திருப்பத்தை மேற்கொண்டது. இது கட்சிக்குள் ஏற்பட்ட ஒரு வரலாற்று ரீதியான வர்க்க மாற்றத்தைப் பிரதிபலித்தது. இதில் தொழிலாளர் வர்க்க உறுப்பினர்களின் இழப்பானது, அரசியல் ரீதியாக பயிற்சி பெறாத குட்டி முதலாளித்துவ சக்திகளின் ஆதிக்கத்தை மத்திய தலைமை பதவிகளுக்குள் கொண்டு வந்தது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “கட்சியானது ஒரு பாட்டாளி வர்க்க நோக்குநிலையை முன்னிறுத்தவும், தொழிலாளர்களை ஒரு புரட்சிகர முன்னோக்கை நோக்கி வென்றெடுக்கவும் மேற்கொண்ட நீண்டகாலப் போராட்டத்தைப் பற்றி அறியாத இந்தச் சக்திகள், தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை சவால் செய்யாமல் விட்டுவிட்ட ஒரு அதி-இடது நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்தன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
டேவிட் நோர்த் தலைமையில், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சீரழிவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அந்தத் தலையீட்டை பீட்டர் சுவார்ட்ஸ் விவரித்தார்.
WRP உடனான மோதலில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு போராடித் தெளிவுபடுத்திய “கோட்பாட்டு, அரசியல் மற்றும் திட்டமிட்ட விவகாரங்களின்” சமகால முக்கியத்துவத்தை விளக்குவதன் மூலம் அவர் தனது உரையைத் தொடங்கினார்.
சுவார்ட்ஸ் கூறுகையில், “கடந்த நான்கு தசாப்தங்களாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அனைத்து அரசியல் சக்திகளும் தங்களின் திவால்நிலையை வெளிப்படுத்தியுள்ளன. பாப்லோவாதமும், இறுதியில் WRP-யும் தங்களை இந்தச் சக்திகளுக்கே தகவமைத்துக் கொண்டன: அவை ஸ்டாலினிசம், சமூக சீர்திருத்தவாதம், குட்டி-முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் ஜெரமி கோர்பின் (பிரிட்டன்), சிரிசா (கிரேக்கம்), பொடெமோஸ் (ஸ்பெயின்) மற்றும் இடது கட்சி (ஜேர்மனி) போன்ற போலி-இடது வகையறாக்களாகும்.
“WRP-க்குள் ஏற்பட்ட நெருக்கடி இந்தச் செயல்முறையுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்ததுடன், பல வழிகளில் அதனை முன்கூட்டியே உணர்த்தியது” என்று சுவார்ட்ஸ் குறிப்பிட்டார்.
மேலும் அவர், “டேவிட் நோர்த் மற்றும் தொழிலாளர் கழகம் 1982 ஆம் ஆண்டிலிருந்து அபிவிருத்தி செய்து வந்த WRP-ன் சந்தர்ப்பவாத சீரழிவு குறித்த விமர்சனமானது, நிலவிய குழப்பங்களுக்குள் ஒரு ஒழுங்கைக் கொண்டு வந்தது. குழப்பங்கள் தணிந்தன, அத்தியாவசியமான விவகாரங்கள் தெளிவாகின, மேலும் சமூக மற்றும் அரசியல் முகாம்கள் தங்களைத் தாங்களே பிரித்துக் கொண்டன...’”
“தந்திரோபாய மற்றும் நிறுவன ரீதியான பரிசீலனைகளை விட, கொள்கைகளைப் பாதுகாப்பதற்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதையும், அனைத்துத் தேசிய அக்கறைகளும் சர்வதேச முன்னோக்கின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பதையும் நான் அக்காலத்தில் முழுமையாகக் கற்றுக்கொண்டேன்.”
“’அப்போதிலிருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் முன்னோக்கானது, மேலும் வளர்ச்சியடைந்து ஆழமடைந்துள்ளதோடு, தொழிலாளர் கழகம் காட்டிய திசைவழியினூடாக, WRP எனும் மிகச் சிறிய அமைப்பிற்குள் எந்தப் பங்கினை ஆற்றியதோ, அதே போன்றதொரு தீர்க்கமான பங்கினை தற்போது விரிவடைந்து வரும் வர்க்கப் போராட்டங்களில் ஒரு மாபெரும் சமூக அளவில் பங்கு வகிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
தமது நிறைவுரையில், டேவிட் நோர்த் WRP‑க்கு எதிரான போராட்டத்தின் மையத்தில் இருந்த அரசியல் கேள்விகளை அவற்றின் முழுமையான சமகால முக்கியத்துவத்துடன் முன்வைத்தார். ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைமையிலான போர் குறித்து அவர் கூறுகையில்:
இந்தப் போரின் மூலோபாயம் என்பது 20ஆம் நூற்றாண்டையே ஒழிப்பதாகும். அதாவது, கடந்த நூற்றாண்டின் மகத்தான விடுதலைப் போராட்டங்களின் அனைத்து அடையாளங்களையும் முற்றிலுமாக அழிப்பதாகும். மார்கோ ரூபியோ (அமெரிக்க வெளி விவகார அமைச்சர்) தனது இலக்கானது 1945-ல் (அதாவது அவரது ஹீரோக்களான நாஜிக்களின் வீழ்ச்சியுடன்) தொடங்கிய அந்த பெரும் பின்வாங்கலை முடிவுக்குக் கொண்டுவருவதே என்று அறிவித்த சில நாட்களிலேயே இந்தப் போர் தொடங்கியது.
அவர் தொடர்ந்து கூறுகையில்:
கடந்த வரலாற்றுக் கால கட்டத்தின் அனைத்து விதிகளும், அனைத்து இயல்புநிலைகளும் முடிவுக்கு வந்துவிட்டன. 1930-கள் மற்றும் 1940-களில் நிலவிய அதே போன்றதொரு சூழலில் இன்று இளைஞர்கள் தங்களைக் காண்கிறார்கள். எங்கும் பாதுகாப்பான புகலிடம் இல்லை. நாம் இப்போது ஒரு வரலாற்று கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் ஒன்று தொழிலாளர் வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அல்லது முதலாளித்துவம் இந்த உலகத்தையே முடிவுக்குக் கொண்டுவரும்...
இந்தச் சூழலில்தான் 1985-ல் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் போராட்டம் நடைபெறாமல் இருந்திருந்தால் இன்று மார்க்சிச, சோசலிச அல்லது ட்ரோட்ஸ்கிச இயக்கம் என்று எதுவுமே இருந்திருக்காது என்று நாம் கூறுகிறோம்.
டேவிட் நோர்த் பின்வருமாறு கூறி முடித்தார்:
அக்காலத்திலிருந்து அனைத்துலகக் குழுவின் அனைத்து சாதனைகளும்: குறிப்பாக, உலக சோசலிச வலைத் தளத்தின் வளர்ச்சி, வரலாற்றுப் பிரச்சினைகள் மீதான தாக்குதல்கள், கழகங்களை (Leagues) அரசியல் கட்சிகளாக மாற்றியது, கடந்த 40 ஆண்டுகளில் திரட்டப்பட்ட மாபெரும் வரலாற்று மற்றும் அரசியல் அறிவு, மற்றும் மிக சமீபத்தில் அறிமுகப்படுத்திய சோசலிசம் AI... இவை அனைத்தும் அனைத்துலகக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் சரியான தன்மையையே பறைசாற்றுகின்றன...
ஆனால், இந்தச் சரியான தன்மையையும் வரலாற்றுத் தொடர்ச்சியையும் அங்கீகரிப்பது மட்டுமே அது ஒரு வெகுஜன இயக்கமாக மாறும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது. எமது முயற்சிகளுக்கு அப்பால் இது நடக்கப் போவதில்லை... வரலாறு எவ்வித உத்தரவாதத்தையும் வழங்குவதில்லை. எது சாத்தியமோ, அது எமது முன்முயற்சிகள் மற்றும் எமது உறுதியால் மட்டுமே அடையப்பட வேண்டும்...
நாம் ஒரு புரட்சிகரக் காலத்தில் இருக்கிறோம். நாம் ஒரு எதிர்ப்-புரட்சிக் காலத்தில் இருக்கிறோம். உலகில் இந்த இரண்டு போக்குகளில் எது மேலோங்கும்? 1932-33 காலப்பகுதியில் நெருங்கி வந்த பாசிசத்தின் நிழலுக்கு எதிராக ட்ரோட்ஸ்கி மிகச் சரியாகச் சொன்னது போல, போராட்டமே இதனைத் தீர்மானிக்கும்.
கூட்டத்தின் பேச்சாளர்களின் உரைகளைத் தொடர்ந்து, 1,500-பவுண்டுகளுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டதோடு, மெஹ்ரிங் நூலகம் வெளியிட்ட நூற்றுக்கணக்கான பவுண்டுகள் மதிப்பிலான நூல்களை கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வாங்கிச் சென்றனர்.
இந்தக் கூட்டத்தின் விவரங்களைப் பற்றி உலக சோசலிச வலைத் தளத்திலும் சோசலிசம் AI மூலமாகவும் மேலும் தெரிந்துகொள்ளுமாறு எங்கள் வாசகர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
