ஈரான் மீது இரண்டாவது நாளாக புதிய தாக்குதல்களுக்கு உத்தரவிட்டுள்ள ட்ரம்ப், "மிகக் கடுமையாக" தாக்கப்போவதாக சூளுரைத்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஈரான் மீது இஸ்ரேலிய குண்டுவீச்சு. ஜூன் 8, 2026 [Photo: @Oezkanciftci]

அமெரிக்கா கடந்த புதன்கிழமையன்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஈரான் மீது குண்டுவீசித் தாக்கியது. கிழக்கு நேரப்படி மாலை 5:15 மணிக்கு ஈரானில் உள்ள “பல இலக்குகளை” தாக்கத் தொடங்கியதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. இந்த இலக்குகளில் ஆயுதக் கிடங்குகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் ஆகியவை அடங்கும் என்று இரண்டு அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக சிபிஎஸ் நியூஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது. பந்தர் அப்பாஸ், மினாப் மற்றும் சிரிக் ஆகிய இடங்களிலும், நாட்டின் தெற்குக் கடற்கரையோரத்தில் உள்ள கெஷ்ம் மற்றும் கிஷ் தீவுகளிலும் குண்டுவீச்சுக்கள் இடம்பெற்றதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஊடகங்களில் “தற்காப்பு” என்று மோசடியாக சித்தரிக்கப்படும் இந்த புதுப்பிக்கப்பட்ட தாக்குதல், ஒரு நாட்டின் மீதான அப்பட்டமான ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும். ஈரானின் தலைவரை வாஷிங்டனும் இஸ்ரேலும் படுகொலை செய்தன, அதன் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது, மேலும் அதன் குடிநீரை தற்போது அமெரிக்க குண்டுகள் அழித்துள்ளன. ஈரானை சரணடையச் செய்வதற்கான 100 நாட்களுக்கும் மேலான தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், ட்ரம்பின் வார்த்தைகளில் கூறுவதானால், “முழுமையாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட” ஒரு சரணடைதல் ஒப்பந்தத்தில் ஈரானைக் கையெழுத்திட வைப்பதற்காக அதன் மீது குண்டுவீச்சு நடத்த முயல்கிறது.

கடந்த திங்கட்கிழமை இரவு ஹோர்முஸ் நீரிணையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஓமன் கடற்கரையில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் இழப்புதான், இந்த புதிய தாக்குதலுக்கான சாக்குப்போக்காகும்; அதில் இருந்த இரண்டு பணியாளர்களும் மீட்கப்பட்டனர். “ஈரானியர்கள் எங்களது அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் ஒன்றை சுட்டு வீழ்த்தினர்” என்றும், “இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா அவசியமாக பதிலடி கொடுக்க வேண்டும்” என்றும் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். ஈரானிய சாஹேத் ட்ரோன் ஒன்று ஹெலிகாப்டரைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது. அதே நேரத்தில், இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்பதை புலனாய்வாளர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று ஆக்ஸியோஸ் செய்தி நிறுவனம் அதே நாளில் தெரிவித்தது.

அமெரிக்காவின் போர் விமானங்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு ஈரானின் தெற்கு கடற்கரையைத் தாக்கத் தொடங்கின. அமெரிக்க இராணுவம் 20 வான் பாதுகாப்பு இலக்குகளைத் தாக்கியதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஆசிரியர் குழு புதன்கிழமை தெரிவித்தது. மேலும், ஈரானிய அதிகாரிகள் அவற்றை பந்தர் அப்பாஸில் உள்ள வான் பாதுகாப்புத் தளங்கள், கெஷ்ம் தீவில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் சிரிக், ஜாஸ்க் ஆகிய இடங்களில் உள்ள கடற்படைத் தளங்கள் ஆகியவையே அவை என ஈரானிய அதிகாரிகள் அடையாளம் காட்டியதாக நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த குண்டுவீச்சுகளால் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்கள் அழிக்கப்பட்டதாக பைனான்சியல் டைம்ஸ் புதன்கிழமை செய்தி வெளியிட்டது. இதனால், 45 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரையிலான கடும் வெப்பத்தில், குஹெஸ்டாக் மற்றும் அருகிலுள்ள 10 கிராமங்களில் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர். “மிகக் கடுமையான காலநிலை மற்றும் கடும் வெப்பத்தில் வாழும் 20,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை இழந்துள்ளனர்,” என்று மாகாண நீர் நிறுவனத்தின் இயக்குநர் அப்துல்ஹமீத் ஹம்ஸெபூர் கூறினார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஒரே இரவில் பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைத் தலைமையகம், குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமானப்படைத் தளம் மற்றும் ஜோர்டானில் உள்ள அஸ்ராக் விமானப்படைத் தளம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுத்ததுடன், அமெரிக்க தளங்கள் மீது 21 தாக்குதல்களை நடத்தியதாக உரிமை கோரியது. இந்த மூன்று நாடுகளின் அதிகாரிகளும், அந்த ஏவுகணைகள் நடுவானில் தடுத்து அழிக்கப்பட்டதாகக் கூறினர். அதே இரவில், ஈரானிய எண்ணெயுடன் முற்றுகையை மீறிச் சென்றதாக இராணுவத்தால் குற்றம் சாட்டப்பட்ட செட்டபெல்லோ என்ற எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலின் இயந்திர அறை மீது அமெரிக்க போர் விமானம் ஒன்று குண்டுவீசித் தாக்கியதில், ஒரு மாலுமி கொல்லப்பட்டார் மற்றும் இருவர் காணாமல் போயினர். இக்கப்பலில் இந்தியப் பிரஜைகள் பணியாளர்களாக இருந்த நிலையில், இந்தியா புதன்கிழமையன்று புதுடெல்லியில் உள்ள மூத்த அமெரிக்க இராஜதந்திரியை நேரில் அழைத்து தனது “கடும் கண்டனத்தைப்” பதிவு செய்தது.

ட்ரம்ப் புதன்கிழமை காலையில், “மத்திய கிழக்கின் ரவுடி ஒழிந்துவிட்டான்!!!” என்றும் ஈரான் “இதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்” என்றும் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். மாலை வேளையில் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது குண்டுவீச்சைத் தொடங்கியது. மேலும், ஈரானின் இராணுவத் தலைமையகம் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதாக அறிவித்ததுடன், அதைக் கடக்க முயலும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறியது.

ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலிருந்து இந்த தீவிரமான தாக்குதல் நடவடிக்கையை புதன்கிழமை காலையில் அறிவித்தார். “சரி, நாம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப் போகிறோம். நாம் அவர்கள் மீது மிகக் கடுமையாக தாக்குதல் நடத்துகிறோம்,” என்று அவர் கூறினார். நீங்கள் குண்டுவீச்சைத்தான் தொடர்கிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, “ஆமாம், நாம் அதைத்தான் செய்கிறோம். ஹெலிகாப்டர் சம்பவத்தின் அடிப்படையில், எமக்கு அதைச் செய்வதற்கான உரிமை இருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று அவர் பதிலளித்தார்.

பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தம்பாவில் (Tampa) செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாம் குண்டுகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால், குண்டுகள் மூலமே பேச்சுவார்த்தை நடத்துவோம். அதில் நாம் மிகவும் வல்லவர்கள். உலகில் எம்மை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை” என்றார்.

இந்தப் புதிய தீவிரத் தாக்குதல் நடவடிக்கை, போரில் ட்ரம்ப் தனது இலக்குகள் எதையும் அடையத் தவறியதையே பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஈரான் முழுவதும் வெடித்த எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் அதன் அரசாங்கத்தைக் கவிழ்க்க ட்ரம்ப் முயன்றுள்ளார். அவரது நிர்வாகம் இரகசியமாக சுமார் 6,000ம் ஸ்டார்லிங்க் இணையச் சேவை உபகரணங்களை ஈரானுக்குள் கடத்தியதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கடந்த பிப்ரவரியில் செய்தி வெளியிட்டது. மேலும் ஈரானுக்குள் ஆயுதங்களையும் அமெரிக்கா அனுப்பியது. “நாங்கள் போராட்டக்காரர்களுக்கு துப்பாக்கிகளை அனுப்பினோம், அதுவும் நிறைய அனுப்பினோம்” என்று ட்ரம்ப் ஏப்ரல் மாதம் பொக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார். பிப்ரவரி 13 அன்று, ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது “நடக்கக்கூடிய மிகச் சிறந்த விஷயம்” என்று அவர் கூறினார்.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை தோல்வியடைந்தபோது, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. பிப்ரவரி 28 அன்று, அவர்கள் ஈரானின் உச்ச தலைவர் அலி கொமேனி, புரட்சிகர பாதுகாப்புப் படையின் தளபதி, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளை அவர்கள் கொன்றனர். அதைத் தொடர்ந்து ஈரானின் இராணுவத்தை உடைப்பதை நோக்கமாகக் கொண்ட வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, இது ஏப்ரல் 8 அன்று நடைமுறைக்கு வந்த பெயரளவிலான போர் நிறுத்தத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் ஏப்ரல் 13 அன்று நடைமுறைக்கு வந்த ஈரானிய துறைமுகங்களின் மீதான கடற்படை முற்றுகையும் தொடர்ந்தது.

100 நாட்களுக்கு மேலான போருக்குப் பிறகும், தற்போது கொமேனியின் மகன் மொஜ்தபா தலைமையிலான தெஹ்ரானில் உள்ள அரசாங்கம் இன்னும் நிலைத்து நிற்கிறது. ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் பிடி இன்னும் உடையவில்லை, மேலும் “முழுமையாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது” என்று ட்ரம்ப் வலியுறுத்தும் ஒப்பந்தத்தில் ஈரான் இன்னும் கையெழுத்திடவில்லை. ட்ரம்பின் வார்த்தைகளில் கூறுவதானால், ஈரான் “தட்டிக்கழித்துக் கொண்டே இருக்கிறது.” ட்ரம்ப் ஒரு இராணுவப் பேரழிவை எதிர்கொண்டுள்ளார், இதற்கு மேலும் தாக்குதலை தீவிரப்படுத்துவது மட்டுமே ஒரே தீர்வு என்று அவர் கருதுகிறார்.

தாக்குதல் நடத்தும் தனது முடிவு குறித்து கடந்த புதன்கிழமையன்று ட்ரம்ப் கூறுகையில், “இதன் மோசமான பகுதி என்னவென்றால், நிபுணர்களின் கணிப்புகளின்படி பங்குச் சந்தை சுமார் 25 சதவீதம் வரை பெருமளவில் வீழ்ச்சியடையும். ஆனாலும் அது அதற்குத் தகுதியானதுதான். என்னைப் பொறுத்தவரை, அது அதற்குத் தகுதியானது. அவர்கள் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதற்காக இது தகுதியானது. மற்றொரு விஷயம் என்னவென்றால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 250 டாலராக உயரும்,” என்றார்.

“ட்ரம்ப்பிற்கு ஒரு புதிய ஈரான் மூலோபாயம் தேவை” என்ற தலைப்பின் கீழ் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்ட ஒரு தலையங்கத்தில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கப் பிரிவுகளின் உணர்வுகளைப் பிரதிபலித்தது.

அந்த தலையங்கக் கட்டுரை, “2006-07 இல் ஈராக்கில் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் எதிர்கொண்டதைப் போன்ற ஒரு தேர்வைத்தான் தற்போதைய ஜனாதிபதியும் எதிர்கொள்கிறார் என்று சொல்வது மிகையாகாது. அங்கு கிளர்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தனர். மேலும் திரு. புஷ் தனது மூலோபாயத்தை மாற்றியமைக்க வேண்டியிருந்தது அல்லது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. அவர் கூடுதல் படைகளை அனுப்பும் மூலோபாயத்தை தேர்ந்தெடுத்து கிளர்ச்சியை முறியடித்தார். இதனால் அமெரிக்காவால் ஈராக்கிலும் அந்த பிராந்தியத்திலும் தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது,” என்று குறிப்பிட்டிருந்தது.

ட்ரம்ப் “ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைப்பற்ற அல்லது அழிப்பதற்கான ஒரு நடவடிக்கையில் இஸ்ரேலுடன் இணைய வேண்டும்” என்றும், “ஈரானுக்குள் இருக்கும் ஆட்சி எதிர்ப்பாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான மண்டலத்தை உருவாக்க” அமெரிக்கா வான்வழி பலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த ஆசிரியர் கட்டுரை முன்மொழிந்தது. அது மேலும், “தற்போது ஜனாதிபதியின் தேர்வு என்னவென்றால், கள நிலவரங்களை மாற்ற வேண்டும், அல்லது திரு. புஷ் ஈராக்கில் விட்டுச் சென்றதை விட மோசமான நிலையில் இந்த மோதலை அப்படியே விட்டுவிட வேண்டும்” என்று குறிப்பிட்டது.

ஈராக் போர் என்பது, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களாலேயே, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட ஒரு பேரழிவுகரமான பின்னடைவாகவே பரவலாகப் பார்க்கப்படுகிறது. 2006 இல் புஷ் இருந்த நிலையை, ட்ரம்ப் சமன் செய்ய போராட வேண்டிய ஒரு அளவுகோலாக ஜேர்னல் இப்போது முன்வைக்கிறது என்பது, ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை எதிர்கொள்ளும் நெருக்கடியின் ஆழத்தை குறிக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலக்குகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பைத் தாக்கிப் பேசியுள்ளனர். போர் தொடங்கியபோது, அவர்கள் இந்தப் படுகொலைகளைக் கொண்டாடினர். “ஈரான் ஒரு மோசமான நாடு, அது ஆக்ரோஷமாக எதிர்கொள்ளப்பட வேண்டும்” என்று நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஸ் பிப்ரவரி 28 அன்று அறிவித்தார். செனட் சிறுபான்மைக் குழுத் தலைவர் சார்லஸ் ஷுமர் மார்ச் 2 அன்று செனட்டில் கூறுகையில், “அலி கொமேனிக்காக நான் ஒரு துளிக் கண்ணீரும் சிந்த மாட்டேன்” என்றார்.

பின்னர், முக்கிய ஜனநாயகக் கட்சியினர் இந்தப் போர் அமெரிக்க இராணுவத்தை மோசமான நிலைக்குத் தள்ளியிருப்பதாக அறிவித்தனர். “அது மேற்கு பசிபிக்கில் சீனாவுடனான மோதலாக இருந்தாலும் சரி, அல்லது உலகின் வேறு எங்காவது இருந்தாலும் சரி, வெடிமருந்துகள் தீர்ந்துவிட்டன” என்று அரிசோனாவின் ஜனநாயகக் கட்சி செனட்டர் மார்க் கெல்லி மே 10 அன்று சிபிஎஸ்-இன் பேஸ் தி நேஷன் நிகழ்ச்சியில் கூறினார். மேலும், கையிருப்புகளை மீண்டும் நிரப்ப பல ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் எச்சரித்தார். ஆயுத சேவைகள் குழுவின் மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ரோட் தீவின் செனட்டர் ஜாக் ரீட், ஏப்ரல் மாத விசாரணை ஒன்றில், சீனா மற்றும் கொரியாவை எதிர்கொள்ளும் பசிபிக் போர்க் களங்களிலிருந்து “ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் அணி, ஒரு நீர்நிலத் தாக்குதல் அணி, பல்வேறு ஏவுகணைப் பாதுகாப்புத் திறன்கள் மற்றும் பிற வெடிமருந்துகளை” ட்ரம்ப் இடம் மாற்றியுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், தொழிலாளர்கள் இந்தப் போருக்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர் புள்ளிவிவரப் பணியகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, நுகர்வோர் விலைகள் மே மாதம் வரையிலான ஓராண்டில் 4.2 சதவீதம் உயர்ந்துள்ளன. இது 2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக உயர்ந்த விகிதமாகும். ஏப்ரல் மாதத்தில் இந்த விலை உயர்வு 3.8 சதவீதமாக இருந்தது. எரிசக்தி விலைகள் 12 மாதங்களில் 23.5 சதவீதமும், பெட்ரோல் விலை 40.5 சதவீதமும் உயர்ந்துள்ளன. வெள்ளை மாளிகையில் இந்தப் புள்ளிவிவரங்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​ட்ரம்ப், “எனக்கு உண்மையில் என்ன பிடிக்கும் தெரியுமா? எனக்குப் பணவீக்கம்தான் பிடிக்கும்” என்று பதிலளித்தார்.

விண்ணை முட்டும் விலை உயர்வுகள் வர்க்கப் போராட்டத்தின் விரிவாக்கத்திற்கு எரியூட்டி வருகிறது. மிச்சிகன் மாகாணத்தின் த்ரீ ரிவர்ஸ் பகுதியில் உள்ள அமெரிக்கன் ஆக்சில் (American Axle) தொழிற்சாலையைச் சேர்ந்த சுமார் 1,000ம் தொழிலாளர்கள் ஜூன் 1 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்தத் தொழிற்சாலையில் நடைபெறும் முதல் வேலைநிறுத்தமாகும். சாகினாவ் (Saginaw) நகரில் உள்ள நெக்ஸ்டீர் (Nexteer) நிறுவனத்தின் தொழிலாளர்கள் அடுத்தடுத்து மூன்று ஒப்பந்தங்களை வாக்கெடுப்பு மூலம் நிராகரித்துள்ளனர். மேலும் 40,000ம் நியூ யோர்க் நகர போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலாவதியான ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். 1994-க்குப் பிறகு லோங் ஐலண்ட் ரயில்வே நடத்திய முதல் வேலைநிறுத்தத்தையும், கொலராடோவின் கிரீலியில் உள்ள ஜேபிஎஸ் மாட்டிறைச்சி ஆலையில் 3,800 தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்தையும் தொடர்ந்து இவை நிகழ்ந்துள்ளன. இந்த மாட்டிறைச்சி ஆலை வேலைநிறுத்தமானது, 1980-களுக்குப் பிறகு அமெரிக்க விலங்குகளை வெட்டும் கூடத்தில் நடந்த முதல் வேலைநிறுத்தமாகும்.

உலக சோசலிச வலைத் தளம் (WSWS), ஈரான் மீதான போரின் 100-வது நாளை முன்னிட்டு கடந்த திங்களன்று வெளியிட்ட தனது அறிக்கையில், “ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களை —போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக— ஒரு சோசலிச வேலைத் திட்டத்துடன் கூடிய நனவான அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும். போருக்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க, முதலாளித்துவ அமைப்புமுறை ஒழிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

Loading